தெலுங்கானா மாநிலத்தின் சுருக்கம் ‘TS’க்கு பதில் ‘TG’ என அழைக்கப்படும் என அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் இரண்டு எழுத்து சுருக்கம் உள்ளது. எடுத்துக்காட்டாக, ஆந்திரப் பிரதேசத்திற்கு AP, பீகாருக்கு BR, மகாராஷ்டிராவிற்கு MH, தமிழ்நாடு TN என அழைக்கப்படுகிறது. அதன் படி தெலுங்கானா மாநிலம் TS என அழைக்கப்பட்டு வந்தது. இதனை TG என மாற்ற தெலுங்கானா அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தங்கள் கட்சிப் பெயருக்குப் பொருத்தமாக ‘டிஎஸ்’ என்ற பெயரை முன்னாள் ஆட்சியாளர்கள் தேர்வு செய்ததாக ஆளுங்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) முன்பு தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி (டிஆர்எஸ்) என்று அழைக்கப்பட்டது. இது அவர்களின் தேசிய அபிலாஷைகளை பிரதிபலிக்கும் வகையில் மாற்றப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தின் அடையாள தாய் தெய்வமான தெலுங்கானா தல்லியும் புதிய தோற்றத்தில் மறுவடிவமைக்கப்படும் எனவும், ஆண்ட்ரே ஸ்ரீயின் ‘ஜெய ஜெய ஹோ தெலுங்கானா’ மாநில கீதமாக மாற்றவும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும் அமைச்சரவை முடிவு செய்தது. ராஜேந்திரநகர் மாவட்டத்தில் புதிய உயர் நீதிமன்ற வளாகத்துக்கு 100 ஏக்கர் ஒதுக்கீடு செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.