2026-ஆம் ஆண்டு நடக்கவுள்ள பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட் லைஃப் மைதானத்தில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடத்தப்படுகிறது. அதன்படி அடுத்த உலகக்கோப்பை தொடர் 2026-ஆம் ஆண்டில் நடைபெற உள்ளது.
இந்த தொடரை அமெரிக்க, கனடா, மெக்சிகோ நாடுகள் கூட்டாக இணைந்து நடத்தவுள்ளன. கடந்த 2022-ஆம் ஆண்டு 32 அணிகள் பங்கேற்ற நிலையில், 2026-ஆம் ஆண்டு 48 அணிகள் பங்கேற்க உள்ளன.
இந்நிலையில், பிஃபா உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஜூன் 11-ஆம் தேதி மெக்சிகோவில் முதல் போட்டி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவின் நியூஜெர்சியில் இறுதிப்போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற நியூஜெர்சி – டெக்சாஸ் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இறுதியில் நியூஜெர்சி இறுதி போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ளது. மொத்தம் 16 நகரங்களில் போட்டி நடத்தப்பட உள்ளது. லீக் சுற்று உட்பட மொத்தமாக 104 போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.