மாநிலங்களவை உறுப்பினராக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய்சிங் பதவியேற்று கொள்ள குடியரசு துணை தலைவர் ஜகதீப் தன்கர் அனுமதி மறுத்துள்ளார்.
கடந்த 2021- 2022 ஆண்டு டெல்லி அரசு கொண்டு வந்த மதுபான கொள்கை மூலம் சில குறிப்பிட்ட மதுபான நிறுவனங்கள் பலன் அடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு டில்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்தார்.
பின்னர் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. டில்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்.பி.சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த மாதத்துடன் சஞ்சய் சிங்கின் மாநிலங்களவை உறுப்பினருக்கான பதவிக் காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து, ஆம் ஆத்மி தரப்பில் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதையடுத்து, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக இடைக்கால ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனினும் நீதிமன்றக் காவலிலேயே பிப்.5-ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
இதனையடுத்து இன்று அவர் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொள்வதாக இருந்தது. ஆனால் சஞ்சய் சிங் மீதான குற்றச்சாட்டு உரிமைக் குழுவில் விசாரணைக்கு உள்ளதால் பதவியேற்புக்கு அனுமதிக்க முடியாது என்று ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.