பொதுத்தேர்வு மற்றும் நுழைவுத்தேர்வுகளில் முறைகேடு செய்வோருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் புதிய மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக, பொதுத் தேர்வுகளில் வினாத்தாள்கள் கசிந்ததால், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அண்மையில் ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையம் (JSSC) பொது அறிவுப் பிரிவில் கேள்விகள் கசிந்ததால் மாநில பொது பட்டதாரி நிலை போட்டித் தேர்வை (JSSC CGL) ஒத்திவைத்துள்ளது.
இதுபோன்ற மோசடிகளை தடுக்க மத்திய அரசு புதிய மசோதா ஒன்றை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மசோதாவை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். பண ஆதாயங்களுக்காக நியாயமற்ற வழிகளில் ஈடுபடும் கும்பல்களையும், நிறுவனங்களையும் தடுப்பதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதன்படி நுழைவுத் தேர்வு மற்றும் பொதுத் தேர்வுகளில் மோசடி செய்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் இந்த மசோதாவில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.வேலை வாய்ப்புக்கான தேர்வுகளில் மோசடி செய்தாலும் 10 ஆண்டுகள் தண்டனை வழங்கப்படும் என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.