கடந்த வருடம் டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் ஏரல் மேல்மட்ட பாலம் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், தற்போது தரைமட்ட பாலம் வழியாகத் தற்காலிகமாகப் போக்குவரத்து நடைபெறுகிறது.
இதனிடையே, அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றில் மணல் எடுத்து ஒரு பகுதிக்குச் செல்ல பாதை அமைக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதி ஆழமாகவும் சேரும் சகதியும் ஆக மாறியுள்ளது.
இது தெரியாமல் வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் நீராடுவதற்காக அந்த பகுதியில் இறங்கி உயிரிழந்து வருகின்றனர். ஏற்கனவே, 2 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மூன்றாவதாக ஒருவர் பலியாகியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் மில்லர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாசிங் மகன் கனகவேல். 43 வயதான இவருக்கு ஜோதி லிங்கம் என்ற மனைவியும், 3 வயதில் ஒரு மகனும், 9 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில், கனகவேல் தனது மனைவி இரண்டு குழந்தைகளுடன் ஏரல் சேர்மேன் அருணாச்சல சுவாமி கோவிலுக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் ஆற்றில் நீராட இறங்கியபோது அங்குள்ள நீரில் சேரும் சகதியுமாக இருந்துள்ளது.
இதனால், தடுமாறி தண்ணீரில் விழுந்த கனகவேல் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி ஜோதி லிங்கம், தனது கணவரைக் காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளார். அப்போது, அங்கே வந்தவர்கள் அது சகதியான பகுதி என்பதால் செல்ல முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளனர்.
பின்னர், அந்த வழியாக வந்த சிலர், தைரியமாக ஆற்றுத் தண்ணீரில் இறங்கி கனகவேலைத் தேடி மீட்டு கரையில் சேர்த்தனர். ஆனால், அவர் நீரிலில் மூழ்கி இறந்துவிட்டது தெரிய வந்தது.
உடனே ஏரல் போலீசா ருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கனகவேல் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த ஒரு மாதங்களில் இது மூன்றாவது உயிரிழப்பாகும்.
இந்த பகுதியில் தொடர் உயிரிழப்பு ஏற்படுவதாகவும், அதனைத் தடுக்க வேண்டியும், மாவட்ட நிர்வாகத்திற்கும், திமுக அரசுக்கும் பல முறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனாலேயே தொடர்ந்து உயிர் பலி ஏற்பட்டு வருவதாக பொது மக்களும், பக்தர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.