இந்திய சிறுபான்மையினர் அறக்கட்டளையைச் சேர்ந்த மதத் தலைவர்கள் அடங்கிய குழுவினர் நாடாளுமன்ற வளாகத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர்.
இந்திய சிறுபான்மையினர் அறக்கட்டளையின் கீழ், 24 மதத் தலைவர்கள் அடங்கிய குழுவினர் திங்கட்கிழமை பாரத பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். இந்தியாவில் உள்ள அனைத்து மத ஒற்றுமையின் செய்தியை வெளி உலகுக்கு கூற விரும்புவதாக தெரிவித்தனர்.
இக்குழுவில் சீக்கிய, ஜெயின், கிறிஸ்தவ மற்றும் பார்சி மாதங்களை சேர்ந்தவர்களும், அகில இந்திய இமாம் அமைப்பின் தலைமை இமாம் உமர் அகமது இல்யாசி மற்றும் மகாபோதி சர்வதேச தியான மையத்தின் நிறுவனர் பிக்கு சங்கசேனா ஆகியோர் அடங்குவர்.
இதுகுறித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, “நாடாளுமன்ற வளாகத்தில் மதத் தலைவர்கள் குழுவினரை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நமது நாட்டின் வளர்ச்சிப்பாதை குறித்து அவர்கள் என்னிடம் தெரிவித்த கனிவான வார்த்தைகளுக்கு நான் நன்றி கூறுகிறேன்” என்று கூறினார். மேலும், மதத் தலைவர்களை சந்தித்த போது எடுத்த சில புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின் அனைத்து சிறுபான்மை மதத் தலைவர்களும் கூறியதாவது,“நம்முடைய சாதிகள், பழக்கவழக்கங்கள், மதங்கள், பிரார்த்தனை முறைகள் வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் மனிதனாகிய நமது மிகப்பெரிய மதம் மனிதநேயம். நாம் அனைவரும் ஒரே நாட்டில் வாழ்கிறோம்.
நாம் அனைவரும் பாரதத்தில் வாழ்பவர்கள். வாருங்கள் நம் நாட்டை பலப்படுத்துவோம். நாம் அனைவரும் இணைந்து நமது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், நாடு மீண்டும் ஒரு ‘விஸ்வகுரு’வாக மாறுவது நெருங்கிவிட்டது. அது நடக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் இந்தக் காட்சிகள் நமது காலம் மாறிவருகிறது என்பதற்குச் சான்று.”, என்று கூறினர்.
இந்திய சிறுபான்மை அறக்கட்டளையின் நிறுவனர் ஹிமானி சூட் கூறுகையில், இந்த அறக்கட்டளை 24 மதத் தலைவர்களைக் கொண்ட குழுவை புதிய நாடாளுமன்றத்திற்கு அழைத்துச் சென்றது. பிரதமர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவைரை சந்தித்தோம். “நமது தேசம் ஒன்றல்ல, எல்லா மதங்களும் ஒன்றாக நிற்பதில்லை என்று ஒரு கதை உருவாக்கப்படுகிறது. நாம் ஒன்றாக நிற்போம், நமது பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியை ஆதரிப்போம் என்ற செய்தியை உலகுக்கு தெரிவிக்க விரும்புகிறோம் என்று கூறினார்.