பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஹசன் மஹ்மூத், இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார் .
டாக்டர் முகமதுவை வரவேற்ற குடியரசுத் தலைவர், பங்களாதேஷின் பிரதமராகத் தொடர்ந்து நான்காவது முறையாகப் பதவியேற்ற பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவரது தலைமையின் கீழ், பங்களாதேஷ் முன்னேற்றம் மற்றும் செழிப்பில் புதிய மைல்கற்களை எட்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
வலுவான, நிலையான மற்றும் வளமான பங்களாதேஷ் இந்தியாவின் நலனுக்கு உகந்தது என்று குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், இந்த உறவு வளர்வதைக் காண இரு தரப்பிலும் அளப்பரிய அரசியல் விருப்பம் உள்ளது என்றும் கூறினார்.
எல்லை மற்றும் பாதுகாப்பு, வர்த்தகம், இணைப்பு, மின்சாரம், உள்கட்டமைப்பு, மக்களுக்கு இடையிலான தொடர்பு போன்ற இருதரப்பு ஒத்துழைப்பின் அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து குடியரசுத்தலைவர் திருப்தி தெரிவித்தார்.
இருதரப்பிலும் உள்ள மக்களையும், பொருளாதாரத்தையும் பாரம்பரியமாக இணைக்கும் ரயில், சாலை மற்றும் நீர்வழிப் பாதைகளுக்கு இரு தரப்பும் புத்துயிர் அளித்து வருவதாகவும், அதே நேரத்தில் புதிய இணைப்புகளையும் உருவாக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.