ராஷ்டிரிய லோக் தளம் கட்சி பா.ஜ.க. கூட்டணியில் இணைந்த நிகழ்வு இந்தியா கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமரான சவுத்ரி சரண் சிங்குக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட நிலையில், இண்டி கூட்டணியில் இருந்து விலகுவதாக ராஷ்டீரிய லோக்தளம் கட்சி அறிவித்துள்ளது.
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களான பிவி நரசிம்மராவ், சவுத்ரி சரண் சிங் ஆகியோருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது. அதேபோல் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கும் நாட்டின் உயரிய சிவிலியன் விருது வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் பேரனும், ராஷ்டீரிய லோக்தளம் கட்சி தலைவருமான ஜெயந்த் சவுத்ரி இண்டி கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சரண் சிங்குக்கு பாரத ரத்னா விருது வழங்கியதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த அவர், நாட்டு மக்களின் உணர்வுகளை பிரதமர் மோடி புரிந்து கொண்டுள்ளார் என்பதை இந்த முடிவு நிரூபிப்பதாக கூறியுள்ளார்.
இது ஒரு உணர்ச்சிகரமான நாள். எனக்கான தருணம்.குடியரசுத்தலைவர்,பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், ஏனெனில் இது அவரது தொலைநோக்கு பார்வையின் ஒரு பகுதியாகும்.
முந்தைய அரசாங்கங்களால் இன்று வரை செய்ய முடியாதது பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையால் நிறைவேறியுள்ளது. பா.ஜ.க. கூட்டணி அழைப்பை என்னால் நிராகரிக்கமுடியவில்லை. வேறு எந்த அரசியல் கட்சியாலும் செய்யமுடியாத பணிகளை பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை செய்துள்ளது என தெரிவித்தார்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராஷ்டிரிய லோக் தளம் கட்சி எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பிரச்சினை நீடித்து வரும் நிலையில் ராஷ்டிரிய லோக் தளம் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. அதேபோல், கூட்டணியில் சமாஜ்வாதி கட்சியுடன் ராஷ்டிரிய லோக் தளம் கட்சிக்கு முரண்பாடு நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.