தொலைபேசி ஒட்டுகேட்கப்படுவதாக குற்றம்சாட்டும் எம்பிக்கள் முதலில் அதனை ஒப்படைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு எதிர்கட்சி எம்பிக்கள் சிலர் தங்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக புகார் தெரிவித்தனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில் மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி தொலைபேசி ஒட்டுகேட்பு தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
இதுதொடர்பாக அமைச்சருக்கு மின்னஞ்சல் அனுப்பியதாகவும், ஆனால் 4 மாதங்கள் ஆன நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், குற்றச்சாட்டு வைத்தால் மட்டும் போதாது. விசாரணை நடத்தவும்,நடவடிக்கை எடுக்கவும் சட்ட அமைப்புகளுக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உங்களது தொலைபேசியை முதலில் ஒப்படையுங்கள், தொழில்நுட்ப ரீதியாக நாங்கள் பரிசோதிக்கிறோம் என தெரிவித்தார்.
மேலும் டீப் பேக் வீடியோக்கள் மற்றும் தவறான தகவல்களை கண்டறிந்து அவற்றை முன்கூட்டியே நீக்குவதற்கான பொறுப்பை சமூக வலைதளங்களுக்கு வழங்கிடும் வகையில் சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்படும். சமூக வலைதளங்கள் மக்களிடையே ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதே சமயம் அதில் உள்ள எதிர்மறையான பிரச்சினைகளை நீக்க வேண்டியது நமது கூட்டுப் பொறுப்பாகும். அதற்கு கடுமையான சட்டங்கள் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.