செஞ்சி அருகே உள்ள சத்தியமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரு.4 கோடியே 50 லட்சம் கையாடல் செய்த வங்கி தலைவர், துணை தலைவர் மற்றும் ஊழியர்கள் என 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 11 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
செஞ்சி அருகே உள்ளது சத்தியமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம். கடந்த 22.04.2015 -ம் தேதி முதல் 4.06.2021 வரையிலான நாட்களில், போலியான நிரந்தர வைப்பு ரசீது மூலம் பல்வேறு நபர்களிடம் நிரந்தர வைப்பு தொகையினைப் பெற்று அத்தொகையினை சங்க கணக்கிற்குக் கொண்டு வராமல் கையாடல் செய்துள்ளதாக வங்கி தலைவர், துணை தலைவர் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட 11 பேர் புகார் எழுந்தது.
மேலும், பல்வேறு நகை கடன்தாரர்களுக்கு அதிகமான தொகை வழங்கியதாக பொய்கணக்கு எழுதி கையாடல் செய்துள்ளனர். அத்துடன், நகைக்கடன் தள்ளுபடி பெறுவதற்குப் பல்வேறு நபர்களின் பெயரில் போலியான நகைக்கடன் வழங்கியதாகப் பொய்கணக்கு எழுதி கையாடல் செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இப்படி, ரூ.4,50,60,652 ரொக்கம் கையாடல் செய்துப்பட்டுள்ளதாக, சங்க செயலாளர் சையத் சாதிக்பாஷா , முதுநிலை எழுத்தர் பசுமலை , சிற்றெழுத்தர் முருகன், விற்பனையாளர் விஜயராஜ், நிர்வாகக் குழுத்தலைவர் சாந்தி, நிர்வாகக் குழுத்தலைவர் அருள்மேரி மற்றும் 11 நிர்வாகச் சங்க உறுப்பினர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டி திண்டிவனம் துணைப்பதிவாளர் சொர்ணலட்சுமி விழுப்புரம் மாவட்ட பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், கடந்த 7 -ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கையாடலில் சம்மந்தப்பட்ட பசுமலை, முருகன், விஜயராஜ், சாந்தி, அருள்மேரி ஆகியோரை கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கடலூர் மாவட்ட மத்திய சிறையில் அடைத்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.