பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் இம்ரான் கானை ஆதரிக்கும் சுயேட்சை வேட்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்ற நிலையில் அங்கு எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 8-ந்தேதி நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் சிறையில் உள்ள இம்ரான் கானின் கட்சி போட்டியிடு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அவரது ஆதரவாளர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் வெளியாகியுள்ளன.
265 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் கானை ஆதரித்த சுயேச்சை வேட்பாளர்கள் 98 இடங்களையும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் கட்சி 69 இடங்களையும், பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) 51 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
எஞ்சிய இடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர். இதனிடையே அந்நாட்டு ராணுவத்தால் நிறுத்தப்பட்ட பெரும்பாலான வேட்பாளர்கள் தோல்வியை தழுவியுள்ளனர்.
இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI)-ஐ ஆதரிக்கும் சுயேச்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்த போதிலும், நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் முஸ்லீம் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
எனினும், இந்த அறிவிப்பை ரத்து செய்ய கோரி சில இடங்களில் அரசியல் கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பல இடங்களில் வன்முறை வெடித்தது. அரசு வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டது. அவர்களை கலைக்க போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனிடையே அண்டை நாடுகளுடனான உறவை மேம்படுத்த தனது அரசாங்கம் முயற்சிக்கும் என பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) தலைவர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.மற்ற கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 336 இடங்களில் 266 இடங்கள் மட்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவை. எஞ்சிய 70 இடங்கள் வெற்றி பெற்ற கட்சிகளின் பெரும்பான்மைக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கப்படும். ஒட்டுமொத்தமாக 169 இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சியில் அமரும் என்பது குறிப்பிடத்தக்கது.