பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் சூழலில், போலீசுக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானில் கடந்த 8-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. அரசியல், பொருளாதார நெருக்கடி, தீவிரவாதம், வன்முறை என பல சவால்களை சந்தித்து வரும் பாகிஸ்தானுக்கு இந்த பொதுத்தேர்தல் மிக முக்கியமானது.
நாடாளுமன்றத் தேர்தலுடன் 4 மாகாணங்களுக்கான தேர்தலும் நடந்தது. பல்வேறு வன்முறைகளுக்கும், தீவிரவாத தாக்குதல்களுக்கும் மத்தியில் பாகிஸ்தான் தேர்தல் நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் நிலவுகிறது. எனினும், அதிகாரப்பூர்வ முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சியை சேர்ந்த, அமீர் என்பவர் என்.ஏ. 11 தொகுதியில் வெற்றி பெற்றார் என பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், இந்த அறிவிப்பை ரத்து செய்ய வலியுறுத்தியும், முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சுயேச்சை வேட்பாளரான சையது பரீன் என்பவருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தானின் வடமேற்கே கைபர் பக்துன்குவா மாகாணத்தில் ஷாங்லா மாவட்டத்தில், நடந்த போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால், போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் மோதலாக மாறியது.
போராட்டக் காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இந்த மோதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தில் போலீசார் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.