சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்று முதல் ஆம்னி பேருந்துகள் மீண்டும் இயங்கப்பட உள்ளது.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து இயக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.
கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகள் நிறுத்த போதுமான இடவசதி இல்லை, பயணிகளுக்குப் பெரும் சிரமம் ஏற்படுவதாக, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் போர்க்கொடி உயர்த்தினர். இதுதொடர்பாக தமிழக அரசிடம் முறையிட்டனர். ஆனாலும், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இதற்கு தமிழக போக்குவரத்துறை பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி மஞ்சுளா, ஆம்னி பேருந்துகள் முடிச்சூர் பணிமனைக்கு மாற்றினால் மட்டுமே பிரச்சினை முடிவுக்கு வரும் என்று தெரிவித்தார். மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ள ஆம்னி பேருந்து நிறுவனங்களின் பணிமனைகளைப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரை அதனை பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்தார்
போரூர், சூரப்பட்டுச் சுங்கச்சாவடிகளில் பயணிகளை ஏற்றி செல்லலாம் என்றும், ஒவ்வொரு ஆம்னி பேருந்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கட்டாயம் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். மேலும், இந்த வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் 15 -ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.