மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தீயெரிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்து முன்னணி இதுதான் திராவிட மாடல் கோவிலை காக்கும் லட்சணமா? என கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தீயெரிப்புச் சம்பவம் நடைபெற்றது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அது வேலை செய்வதில்லை. தீ எரிப்பு சம்பவம் நடைபெற்ற பிறகு காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்த போது சி சி டிவி கேமராக்கள் பழுதாகி இருந்தது தெரிய வந்தது. மிகப்பெரிய தொன்மை வாய்ந்த இந்தக் கோவிலில் காவலாளி கூட நியமிக்கவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இதே கோவிலில் ஒரு வாரத்திற்கு முன்பாக இரண்டு வாலிபர்கள் ஆபாச பாடலுக்குக் குத்து நடனம் ஆடினர். இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பே நடந்தது இந்த அநாகரிகம். பக்தர்களின் எதிர்ப்பு வந்த பிறகு நிர்வாகம் மன்னிப்பு கேட்டது. காவல்துறையில் புகார் அளித்துள்ளது.
கபாலீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நாமாவளி பாடக்கூடாது என்று அறநிலையத்த்துறை ஆணையரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இத்தகைய அட்டூழியம் வேற்று மத வழிபாட்டு இடங்களில் அதிகாரிகளால் நடந்திருந்தால் விஷயம் விபரீதமாகியிருக்கும்.
சில நாட்களுக்கு முன்பு இதே கோவிலில் முஸ்லிம்கள் உள்ளே சென்று செல்போனில் வீடியோ எடுத்ததும் சர்ச்சையாகியது. இஸ்லாமிய மொகரம் ஊர்வலத்தின் போது முஸ்லிம்கள் தங்களைத் தாங்களே வெட்டிக் கொண்ட ஆயுதங்களைக் கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் கழுவ அனுமதித்து அசுத்தம் படுத்துகின்றனர்.
இதையெல்லாம் கேட்க திராணியில்லாத அறநிலையத்துறை, கோவிலை காக்க குரல் கொடுத்து வரும் முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் பக்தர்களோடு கோவில் மண்டபத்தில் அமர்ந்து பேசக்கூடாது என்று கோவில் நிர்வாகம் தடை செய்திருக்கிறது. இப்படி தொடர்ந்து மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.
இதையெல்லாம் சரி செய்யாத அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திராவிட மாடல் ஆட்சியில் தவறுகள் நடந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறுவது நகைப்பிற்குரிய செய்தியாகவே தோன்றுகிறது.
தமிழகத்தில் இந்த மூன்றாண்டு காலத் திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு கோவில்களில் பல்வேறு விதமான அசம்பாவித சம்பவங்கள் நடந்தேறி உள்ளன.
திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் மின்சாரம் தாக்கி மதுரையைச் சேர்ந்த பிரசாத் என்ற இளைஞர் உயிரிழந்தார். அந்த இளைஞரின் குடும்பத்திற்குத் தமிழக அரசு இதுவரை எந்த நிவாரணமும் வழங்கவில்லை.
சூரசம்காரம் விழாவின்போது சிறப்பு தரிசனத்திற்காக 2000 ரூபாய் வசூலித்தது கோவில் நிர்வாகம். இதை இந்து முன்னணியினர் தட்டி கேட்டனர். பிறகு பக்தர்கள் இதைத் தட்டி கேட்ட பொழுது மிரட்டப்பட்டனர். திருச்செந்தூர் முருகனுக்குப் பால்காவடி எடுத்து வரும் பக்தர்களைத் தடுத்து நிறுத்தி பால் காவடிகளைக் கீழே ஊற்றி அசிங்கப்படுத்தினர். பால் காவடி எடுத்து வந்த பல பக்தர்கள் கண்ணீரோடு புலம்பி நின்றதை யாரும் மறந்திருக்க முடியாது.
ஸ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பக்தர் கோவில் பணியாளர்களால் தாக்கப்பட்டார். இதற்கு நியாயம் கேட்க மக்கள் திரண்டனர். தாக்கப்பட்ட பக்தர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்து அச்சப்படுத்தி வெளியேற்றியது. இதே போல ராமேஸ்வரம் கோவிலிலும் பக்தர்கள் தாக்கப்பட்டனர்.
கடந்த வாரத்தில் தைப்பூசம் நிகழ்ச்சிக்காகப் பழனிக்கு வந்த எடப்பாடியைச் சேர்ந்த பக்தர் ஒருவரை கோவில் பணியாளர்கள் என்ற பெயரில் குண்டர்கள் அரை நிர்வாணமாக்கி தாக்கினர். பக்தர்கள் வெளியே வந்து கோவில் நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியபோது காவல்துறையினர் பக்தர்களை மிரட்டிய சம்பவம் நடந்தது. அறநிலையத்துறையின் நிர்வாகச் சீர்கேட்டையும் ரவுடித்தனத்தையும் இது தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.
ஸ்ரீவில்லிபுதூர் கோவிலில் இரண்டு கல்யானை சிலைகளும் இரண்டு கொடி மரங்களும் காணாமல் போனது. இவைகள் திருட்டுப் போய் ஆறு மாதம் கழித்து அறநிலையத்துறை அலுவலரால் காவல் நிலையத்தில் புகார் தரப்படுகிறது.
தற்போது, சென்னை திருவேற்காடு அம்மன் தாலியை இந்து சமய அறநிலையத்துறையால் தற்காலிக அர்ச்சகராக நியமிக்கப்பட்டவர் திருடி அடகு வைத்த செய்தி வெளியாகி இருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பலர் மீது சிலை கடத்தல் முதல் பல கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான அந்த அதிகாரிகள் இன்று தி.மு.க அரசின் தயவால் அதிகார பீடத்தில் அமர்ந்து உள்ளனர்.
பழனி மலையில் மேளதாளங்கள் முழங்கி வரக்கூடாது என்று செயல் அலுவலர் லட்சுமி அவர்கள் உத்தரவிடுகிறார். ஆண்டாண்டு காலம் பக்தர்களின் பராம்பரிய வழக்கமான மேளதாளத்தைத் தடை செய்வது தான் திராவிட மடல் அரசின் சாதனையா?
திருவள்ளூர் மாவட்டம் அருள்மிகு சிறுவாபுரி முருகன் கோவிலில் சுவாமியை தரிசனம் செய்யப் பக்தர்களுக்குத் தடை விதித்துள்ளார் செயல் அலுவலர் விஜயா. வெறும் பிரகாரத்தை மட்டுமே சுற்றி சுவாமியை தூரமாக நின்று தரிசனம் செய்யப் பக்தர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் கோவிலுக்கு வேண்டுதலுக்காக வரும் பக்தர்கள் மன வேதனையோடு செல்கின்றனர்.
இப்படி, தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாகக் கடவுள் நம்பிக்கை இல்லாத திராவிட மாடல் ஆட்சியால் கோவில்கள் சீரழிக்கப்படுகிறது. பக்தர்கள் பயமுறுத்தப்படுகிறார்கள். மக்கள் அவமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் தவறுகள் எங்கே நடந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு கூறியிருப்பது வடிகட்டிய பொய்.
இனியாவது, அறநிலையத்துறை வசம் உள்ள தமிழகக் கோவில்களைப் பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தர்களைத் தாக்கப்படுகின்ற போக்கினை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.