19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதவுள்ளன.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறவுள்ளது.
மொத்தமாக 16 அணிகள் கலந்துகொண்ட இந்தப் போட்டியானது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்தது. இந்தத் தொடரில் இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.
உதய் சாஹரன் தலைமையிலான இந்திய அணி லீக் ஆட்டங்களில் வங்காளதேசம், அயர்லாந்து, அமெரிக்காவையும், சூப்பர் சிக்ஸ் சுற்றில் நியூசிலாந்து, நேபாளத்தையும், அரைஇறுதியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவையும் தோற்கடித்து 9-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஹியூக் வெப்ஜென் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றில் நமிபியா, ஜிம்பாப்வே, இலங்கையையும், சூப்பர் சிக்ஸ் சுற்றில் இங்கிலாந்தையும், அரைஇறுதியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும் வீழ்த்தி 6-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.
இன்று நடைபெறும் இந்தப் போட்டி தென் ஆப்பிரிக்காவில் சஹாரா பார்க் வில்லோமூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.