மத்தியப் பிரதேசத்தில் ஸ்வமித்வா திட்டத்தின் பயனாளிகளுக்கு 1.75 லட்சம் உரிமைகள் பதிவைப் பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்.
மத்தியப் பிரதேசத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார். மதியம் 12:40 மணியளவில், மத்தியப் பிரதேசத்தின் ஜபுவாவில் சுமார் 7500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
பிரதமர் மோடி மேற்கொண்ட முன்முயற்சிகளுக்கு அந்த்யோதயாவின் தொலைநோக்குப் பார்வை வழிகாட்டியாக உள்ளது. வளர்ச்சியின் பயன்கள் பழங்குடியின சமூகத்தினரைச் சென்றடைவதை உறுதி செய்வது முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளில் ஒன்றாகும், அவர்களில் பெரும்பகுதியினர் சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்களுக்குப் பிறகும் இந்த நன்மைகளைப் பெற முடியவில்லை. இதன் அடிப்படையில், இந்தப் பிராந்தியத்தில் உள்ள குறிப்பிடத்தக்க பழங்குடியின மக்களுக்குப் பயனளிக்கும் பல்வேறு திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுவார்.
சுமார் இரண்டு லட்சம் பெண் பயனாளிகளுக்கு உணவு மானியத் திட்டத்தின் கீழ், மாதாந்திர தவணையைப் பிரதமர் வழங்குவார். இந்தத் திட்டத்தின் கீழ், மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு பின்தங்கிய பழங்குடியினப் பெண்களுக்கு சத்தான உணவுக்காக மாதத்திற்கு ரூ. 1500 வழங்கப்படுகிறது.
ஸ்வமித்வா திட்டப் பயனாளிகளுக்கு 1.75 லட்சம் உரிமைப் பதிவுகளைப் பிரதமர் வழங்குவார். இது மக்கள் தங்கள் நிலத்தின் மீதான உரிமைக்கான ஆவண ஆதாரங்களை வழங்கும்.
இந்தப் பிராந்தியத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு சேவை வழங்கும் பிரத்யேக பல்கலைக்கழகமான தாந்த்ய மாமா பில் பல்கலைக்கழகத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.
ரூ.170 கோடி செலவில் உருவாக்கப்படவுள்ள இந்தப் பல்கலைக்கழகம் மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை வழங்கும்.
பிரதமரின் மாதிரி கிராமத் திட்டத்தின் கீழ் 559 கிராமங்களுக்கு ரூ.55.9 கோடியைப் பிரதமர் வழங்குவார். அங்கன்வாடி பவன்கள், நியாய விலைக் கடைகள், சுகாதார மையங்கள், பள்ளிகளில் கூடுதல் அறைகள், உட்புறச் சாலைகள் உள்ளிட்டப் பல்வேறு வகையான கட்டுமான நடவடிக்கைகளுக்கு இந்தத் தொகை பயன்படுத்தப்படும்.
ஜபுவாவில் ‘முதல்வர் எழுச்சிப் பள்ளி’க்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். ஸ்மார்ட் வகுப்புகள், மின் நூலகம் போன்ற நவீன வசதிகளை மாணவர்களுக்கு வழங்க தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கும் வகையில் பள்ளி செயல்படும்.
மத்தியப்பிரதேசத்தில் குடிநீர் விநியோகத்தை வலுப்படுத்தும் பல்வேறு திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பதுடன், பல்வேறு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
தார் மற்றும் ரத்லத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்குக் குடிநீர் வழங்கல் திட்டமான ‘தலவாடா திட்டம்’ அடிக்கல் நாட்டப்படும் திட்டங்களில் அடங்கும்.
ஜபுவாவின் 50 கிராமப் பஞ்சாயத்துகளுக்கான ‘நல் ஜல்’ திட்டத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். இது சுமார் 11 ஆயிரம் குடும்பங்களுக்குக் குழாய் நீரை வழங்கும்.
இந்த நிகழ்ச்சியின் போது பிரதமர், பல்வேறு ரயில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். ரத்லம் ரயில் நிலையம் மற்றும் மேக்நகர் ரயில் நிலையத்தின் மறுவடிவமைப்புக்கு அடிக்கல் நாட்டுவதும் இதில் அடங்கும். இந்த நிலையங்கள் அமிர்த பாரத நிலையத் திட்டத்தின் கீழ் மறுவடிவமைப்பு செய்யப்படும். இந்தத் திட்டங்கள் ரயில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களுக்கான பயண நேரத்தைக் குறைக்கவும் உதவும்.
மத்தியப்பிரதேசத்தில் 3275 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு சாலை மேம்பாட்டுத் திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். இந்தத் திட்டங்கள் சாலை இணைப்பை மேம்படுத்துவதோடு, இப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும்.
மேலும், கழிவுகளைக் கொட்டும் இடத்தை சீரமைத்தல், துணை மின் நிலையம் போன்ற இதர வளர்ச்சித் திட்டங்களையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.