நாட்டின் கலாச்சார உணர்வின் மையங்களை புதுப்பித்ததன் மூலம், உலக அரங்கில் பாரதத்தின் கலாச்சார பாரம்பரியத்திற்கான மரியாதையை பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்றது. அந்த சிலையை மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் வடிவமைத்துள்ளார். அவரின் பாராட்டு விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். மேலும் சுத்தூர் ஸ்ரீக்ஷேத்திரத்தில் ஸ்ரீமதி பர்வதம்மா மற்றும் ஸ்ரீ ஷாமனூர் சிவசங்கரப்பா விருந்தினர் மாளிகையை அவர் திறந்து வைத்தார்.
விழாவில் பேசிய அவர், அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம், வாரணாசி காசி விஸ்வநாதர் வழித்தடம், உஜ்ஜயினியி மஹாகல் வழித்தடம் மற்றும் அதன் வளர்ச்சி குறித்து விவரித்தார். கேதார்நாத் மற்றும் பத்ரி ஆகியவை நாட்டின் கலாச்சார உணர்வின் மையங்களுக்கு புத்துயிர் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டைப் பாதுகாப்பாகவும் வளமாகவும் மாற்றுவதுடன், யோகா, ஆயுர்வேதம் மற்றும் இந்திய மொழிகளைப் பாதுகாப்பதில் பிரதமர் மோடியின் பங்கு அளப்பரியது எனவும் அமித் ஷா குறிப்பிட்டார்.
முன்னதாக, அவர் 12 ஆம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதி பசவண்ணாவுக்கு தீபாஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது போதனைகள் அவரைப் பின்பற்றுபவர்களுக்கு உதவியாக இருந்தது மட்டுமல்லாமல், கோடிக்கணக்கான மக்களுக்கு அறிவொளி அளித்து அவர்களின் வாழ்க்கை முறையைக் காட்டியதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.