அபுதாபியில் இன்று நடைபெறும் “அஹ்லான் மோடி” என்ற பிரமாண்ட நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.
அபுதாபியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட இந்து கோயிலை பிரதமர் மோடி நாளை (14ஆம் தேதி) திறந்து வைக்கிறார். அபுதாபியின் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு அமீரக ஆயுதப் படைகளின் துணைத் தளபதியுமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், 2015 ஆம் ஆண்டு கோவில் நிர்மாணத்திற்காக 13.5 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கினார்.
1,200க்கும் மேற்பட்ட இந்து கோயில்களை நிறுவி வரும் பாப்ஸ் (BAPS) அமைப்பு அபுதாபி கோயிலை கட்டியுள்ளது. இதை நல்லிணக்கத்தின் திருவிழா என அங்குள்ள மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் அபுதாபியில் இன்று நடைபெறும் அஹ்லான் மோடி என்ற இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அரேபிய மொழியில் “வரவேற்பு” என்று மொழிபெயர்க்கப்பட்ட இந்த நிகழ்வு, இந்திய புலம்பெயர்ந்தோரின் மிகப்பெரிய கூட்டங்களில் ஒன்றாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதில் சுமார் 60,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அபுதாபி ஜாயித் ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் மாலை நடைபெறும் இந்த பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் 700 நடனக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
அவர் நாளை (புதன்கிழமை) மதியம் 12.30 மணியளவில் துபாயில் 3-வது நாளாக நடைபெறும் உலக அரசு உச்சி மாநாட்டில் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டு பேசுகிறார். அப்போது அமீரக அதிபர், ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் மற்றும் அமீரக துணை அதிபர் ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.
தொடர்ந்து நாளை மாலை பிஏபிஎஸ் அமைப்பு சார்பில் துபாய்- அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் முரக்கா பகுதியில் பல்வேறு வசதிகளுடன் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட கோவில் மற்றும் அதன் வளாகத்தை மோடி திறந்து வைக்கிறார். அபுதாபி இந்து கோவிலில் காலையில் சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது.