தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு நடந்து கொண்ட விதம் தவறானது என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றினார். ஆனால் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்றும், அரசு தயாரித்த உரையில் உண்மைக்கு மாறான தகவல்கள் உள்ளதாக கூறி இரு நிமிடத்தில் உரையை நிறைவு செய்தார்.
பின்னர் ஆளுநர் உரையை தமிழில் சபாநாயகர் வாசித்தார். அவரது உரை முடியும் அருகே அமர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி பொறுமை காத்தார். ஆனால் சபாநாயகரின் அவதூறு பேச்சால் ஆளுநர் ரவி அவையை விட்டு புறப்பட்டு சென்றார்.
இதுதொடர்பாக தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு நடந்து கொண்ட விதம் தவறு. சில கருத்துகளை சபாநாயகர் கூறியிருக்கக் கூடாது. தேசிய கீதம் இசைப்பதை கவர்னர் எதிர்பார்த்திருந்தார். நானும் அதைத்தான் எதிர்பார்த்திருந்தேன் என தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் ஆளுநர் உரை வாசிக்க அனுமதி இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் ஆளுநர் உரையை வாசிக்க விடாத அந்த மாநில அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழக அரசு எதையும் சரியாகச் செய்வதில்லை. கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம் இதற்கு உதாரணம். எதுவாக இருந்தாலும், நாங்கள் இப்படித்தான் செயல்படுவோம், கேள்வியே கேட்கக்கூடாது என்பதுபோல மாநில அரசு செயல்படக் கூடாது என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.