மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் ராஜகோபுர வாயிலில், பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மயிலாப்பூரில் பிரசத்திபெற்ற கபாலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சென்னை மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு முறையான பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இதனால், கோயில் முன்பு மர்ம நபர்கள் சிலர் இரவு நேரங்களில், அட்டகாசம் செய்து வருகின்றனர்.
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு குடிபோதையில் இருந்த நபர் ஒருவர், கபாலீஸ்வரர் ராஜகோபுர பிரதான நுழைவு வாயிலில், சில பொருட்களை பெட்ரோல் ஊற்றி எரித்தார். இருந்தபோதிலும், அதிர்ஷ்டவசமாக கோயிலின் கதவு சேதமடையவில்லை.
இதுதொடர்பான காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்த காணொலியை பார்த்த பக்தர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும், அந்த மர்ம நபரை கைது செய்ய வலியுறுத்தினர்.
இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடைபெற்றபோது, கோவில் பாதுகாவலர்கள் யாரும் இல்லை என்றும், கோவில் வாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பழுதாகி இருந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
பின்னர், கோவில் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், கபாலீஸ்வரர் கோவில் வாயிலில் தீ வைத்ததாக, அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த தீனதயாளன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.