ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார் பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவது : பிப்ரவரி 13 முதல் 14 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும், பிப்ரவரி 14-15 தேதிகளில் கத்தாருக்கும் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறேன். இது ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நான் மேற்கொள்ளும் ஏழாவது பயணமாகும். 2014-ம் ஆண்டுக்குப் பிறகு கத்தாருக்கு நான் மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும்.
கடந்த ஒன்பது ஆண்டுகளில், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, உணவு, எரிசக்திப் பாதுகாப்பு, கல்வி போன்ற பல்வேறு துறைகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடனான நமது ஒத்துழைப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. நமது கலாச்சாரம் மற்றும் மக்களுக்கு இடையேயான இணைப்பு முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை அபுதாபியில் சந்தித்து, நமது விரிவான உத்திசார் பங்களிப்பை முன்னெடுத்துச் செல்வது குறித்து விரிவான விவாதங்கள் நடத்துவதை நான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.
அண்மையில் குஜராத்தில் நடைபெற்ற துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சிமாநாடு 2024-ல் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அந்நாட்டின் இளவரசரை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணை அதிபரும், பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அழைப்பின் பேரில், 2024 பிப்ரவரி 14 அன்று துபாயில் நடைபெறும் உலக அரசு உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்களின் கூட்டத்தில் நான் உரையாற்ற உள்ளேன். உச்சிமாநாட்டிற்கு இடையே, பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் உடனான எனது விவாதங்கள், துபாயுடனான பன்முக உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தவுள்ளேன்.
இந்தப் பயணத்தின்போது, அபுதாபியில் முதலாவது இந்து ஆலயத்தையும் திறந்து வைக்க உள்ளேன். இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் பகிர்ந்து கொள்ளும் நல்லிணக்கம், அமைதி, சகிப்புத்தன்மை ஆகியவற்றின் மதிப்புகளுக்கு இந்த கோயில் ஒரு நிலையான புகழாரமாக இருக்கும்.
அபுதாபியில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அனைத்து இந்திய சமூகத்தினரிடமும் நான் உரையாற்ற உள்ளேன்.
கத்தாரில், அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியை சந்திப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். அவரது தலைமையின் கீழ் கத்தார் தொடர்ந்து மிகப்பெரிய வளர்ச்சியையும் மாற்றத்தையும் கண்டு வருகிறது. கத்தாரில் உள்ள இதர முக்கியப் பிரமுகர்களையும் சந்திக்க ஆவலாக உள்ளேன்.
இந்தியாவும், கத்தாரும் வரலாற்று ரீதியாக நெருக்கமான நட்புறவைக் கொண்டுள்ளன. சமீப ஆண்டுகளில், இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் வர்த்தகம் மற்றும் முதலீடு, நமது எரிசக்தி பங்களிப்பை வலுப்படுத்துதல், கலாச்சாரம் மற்றும் கல்வியில் ஒத்துழைப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் நமது பன்முக உறவுகள் தொடர்ந்து ஆழமடைந்து வருகின்றன. தோஹாவில் 8,00,000-க்கும் மேற்பட்ட வலுவான இந்திய சமூகத்தினர் இருப்பது இருநாட்டு மக்களுக்கு இடையேயான வலுவான உறவுகளுக்குச் சான்றாகும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.