மறைந்த இயக்குனர் வெற்றி துரைசாமியின் வீட்டிற்கு தனது மனைவி ஷாலினியுடன் நேரில் சென்று நடிகர் அஜித் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
சென்னை முன்னாள் மேயர், சைதை துரைசாமியின் மகனும், இயக்குனருமான வெற்றி துரைசாமி இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றபோது பயணித்த கார் கடந்த வாரம் சட்லஜ் நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் அவரது ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் நண்பர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெற்றி குறித்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில், விபத்து நடந்த 8 நாட்களுக்குப் பிறகு வெற்றி துரைசாமியின் உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வெற்றி துரைசாமியின் உடல் இன்று சென்னை கொண்டுவரப்படுகிறது. அவரது மறைவுக்கு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வெற்றி துரைசாமியின் நெருங்கிய நண்பரான நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் வெற்றி துரைசாமியின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
முன்னதாக நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி எக்ஸ் வலைத்தளத்தில் வெற்றி துரைசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.