இருநாள் பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்.,13) சென்றார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியை கட்டி அணைத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் நக்யான் வரவேற்றார்.பின்னர் அந்நாட்டின் ராணுவ அணிவகுப்பை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
இதனைத்தொடர்ந்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். அப்போது இரு நாடுகள் இடையே பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.மேலும் அபுதாபியில் UPI RuPay card பணப்பரிவர்த்தனையை இரு தலைவர்களும் தொடங்கி வைத்தனர்.
அப்போது தங்களின் அன்பான வரவேற்பிற்கு நன்றி. நான் உங்களைச் சந்திக்க இங்கு வரும்போதெல்லாம், எனது குடும்பத்தைச் சந்திக்க வருவதாகவே உணர்கிறேன். கடந்த 7 மாதங்களில் 5 முறை சந்தித்தோம், இது மிகவும் அரிதானது மற்றும் நமது நெருங்கிய உறவைப் பிரதிபலிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும் எனது அழைப்பை ஏற்று சொந்த மாநிலமான குஜராத்தில் நடைபெற்ற உச்சிமாநாட்டிற்கு வந்ததற்கு நன்றி. இந்த நிகழ்வை நீங்கள் புதிய உச்சத்திற்கு கொண்டு சென்று உள்ளீர்கள் என பிரதமர் மோடி அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் நக்யானுக்கு நன்றி தெரிவித்தார்.
இன்று நாம் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். இது மகிழ்ச்சியான விஷயம். இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் இந்த முக்கியமான திசையில் முன்னேறி வருகின்றன என்பது ஜி 20 நாடுகளுக்கு ஒரு பெரிய செய்தியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்றும் மோடி குறிப்பிட்டார்.
இதனைத்தொடர்ந்து அபுதாபியில் நடைபெறும் அஹ்லான் மோடி என்ற இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இதில் சுமார் 60,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயணன் கோவிலை நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். பின்னர் அவர் கத்தார் நாட்டிற்கு செல்கிறார்.