வேலூரில் இருந்து சென்னை நோக்கி வந்த மின்சார ரயிலில் பிரேக்கில் கோளாறு ஏற்பட்டதால், நடுவழியில் நிறுத்தப்பட்டது.
வேலூர் கன்டோன் மென்ட் இரயில் நிலையத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கி மின்சார ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் திருவள்ளூர் அருகே செஞ்சிபனம்பாக்கம் – கடம்பத்தூர் ரயில் நிலையத்திற்கு இடையே வந்து கொண்டிருந்தபோது, பிரேக்கில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கட்டது.
மேலும், ஒரு பெட்டியின் கீழ்ப்பகுதியில் சக்கரம் சரிவர சுற்றாமல் தண்டவாளத்தில் உரசி புகை வந்ததும் தெரியவந்தது. இதை அடுத்து, பாதுகாப்பு கருதி ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து ரயில்வே நிலைய ஊழியர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அந்த தண்டவாளத்தின் வழியாக வந்த மற்ற ரயில்கள் மாற்று பாதை வழியாக சென்றது. சிறிது நேரத்தில் பிரேக் சரிசெய்யப்பட்டது. பின்னர், அந்த மின்சார ரயில் சென்னை கடற்கரை நோக்கி சென்றது.