திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையைச் சேர்ந்த ஸ்ரீபதி (வயது 23), ஏலகிரி மலையில் ஆரம்பக் கல்வி பயின்றார். பின்னர்ப் பி.ஏ, பி.எல் சட்டப் படிப்பை வெற்றிகரமாக முடித்தார்.
இதனிடையே, கடந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. சார்பில் சிவில் நீதிபதி தேர்வு அறிவிப்பு வெளியானது. இந்தத் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டு இருக்கும்போதே ஸ்ரீபதி-க்குப் பிரசவத்திற்கு தேதி குறித்துள்ளனர் டாக்டர்கள்.
ஆனால், நீதிபதி பதவிக்கான தேர்வு தேதியும் அதே நாளில் வெளியானது. இதனால், ஸ்ரீபதி கடும் அதிர்ச்சி அடைந்தார்.
இந்த நிலையில், தேர்வுக்கு முந்தைய நாள் ஸ்ரீபதிக்கு பிரசவவழி வந்து குழந்தை பிறந்துள்ளது. ஆனாலும், கணவர் உதவியுடன், 2-வது நாளே சென்னைக்குக் காரில் பயணம் செய்து சிவில் நீதிபதி தேர்வு எழுதியுள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் டி.என்.பி.எஸ்.சி. சிவில் நீதிபதி தேர்வு முடிவு வெளியானது. இதில், ஸ்ரீபதி சிவில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
இதன் மூலம் ஜவ்வாது மலையில் 23 வயதில் சிவில் நீதிபதியாகத் தேர்வாகியுள்ள பழங்குடியின பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஸ்ரீபதி.
பிரசவத்துக்கு அடுத்தநாளே, திருவண்ணாமலை ஜவ்வாது மலையில் இருந்து சென்னை வரை சென்று நீதிபதி தேர்வு எழுதி வெற்றி பெற்ற ஸ்ரீபதி-க்கு நாலா திசைகளில் இருந்தும் வாழ்த்துகளும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.