45வது செஸ் ஒலிம்பியாட் ஜோதியை மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் ஹங்கேரியிடம் ஒப்படைத்தார்.
45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி நாட்டில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டின் பிரதிநிதியிடம் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் ஒப்படைத்தார்.
மேஜர் தயான்சந்த் தேசிய மைதானத்தில் நடைபெற்ற விழாவில் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர், இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்துடன் இணைந்து சர்வதேச செஸ் கூட்டமைப்பான ஃபிடேயின் தலைவர் அர்காடி ட்வோர்கோவிச், ஹங்கேரிய கிராண்ட் மாஸ்டர் ஜூடிட் போல்கர் ஆகியோருக்கு எதிராக நட்பு ரீதியில் செஸ் விளையாடினார்.
இந்நிகழ்ச்சியின் போது பேசிய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர், செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டம் நடத்த வேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் முடிவு செய்து நடத்தினோம். தற்போது அந்த ஜோதியை ஒப்படைப்பதற்காக நான் இங்கு வந்துள்ளேன் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறினார்.
செஸ் விளையாட்டு என்பது இந்தியா உலகிற்கு வழங்கும் ஒரு அறிவார்ந்த மரபு என்று கூறிய அவர், இது ஒரு விளையாட்டு மட்டுமல்ல, மனதைக் கூர்மைப்படுத்தி பொறுமையைக் கற்பிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்றது. அதில் 2500-க்கும் மேற்பட்ட வீரர்களும், 7000-க்கும் மேற்பட்டவர்களும் பங்கேற்றனர்.