தென்திருப்பேரையில் டாஸ்மாக் மதுபான கடையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க-வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையில் தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. நவத்திருப்பதி கோவில்களில் ஒன்றான மகர நெடுங்குழைகாதர் கோவில், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேருந்து நிறுத்தம் அருகே டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. கோவில் அருகே மதுபானக் கடை செயல்படக் கூடாது என்றும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் விதி இருந்தும், அதை மதிக்காமல் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
இதனால், உள்ள டாஸ்மாக் மதுபான கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு தரப்பினர் போராடி வருகின்றனர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க-வினர் தென்திருப்பேரை டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.
அப்போது, திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் 40 நாட்களில் உரிய முடிவெடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தெற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் சித்ராங்கதன் தலைமையில் தென்திருப்பேரை டாஸ்மாக் கடை முன்பு பா.ஜ.க-வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏரல் தாசில்தார் கண்ணன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வருகிற வெள்ளிக்கிழமை தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்துவோம். அதுவரை போராட்டத்தைக் கைவிடுமாறும் அதுவரை டாஸ்மாக் மதுபான கடை செயல்படாது என உறுதி அளித்தார்.