பிஏபிஎஸ் அமைப்பு சார்பில், பல்வேறு வசதிகளுடன் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோயிலை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். ஆன்மிகத் தலைவர் மஹந்த் சுவாமி மகராஜ், மத்திய கிழக்கின் முதல் பாரம்பரிய இந்து கோயிலின் திறப்பு விழாவுக்குத் தலைமை தாங்கினார்.
பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார். பிரதமர் மோடிக்கு ராணுவ மரியாதையுடன் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அஹ்லான் மோடி நிகழ்ச்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையேயான உறவுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சத்தை எட்டியுள்ளது என்று கூறினார்.
இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி துபாயில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும், துணை அதிபரும், பாதுகாப்பு அமைச்சரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமை சந்தித்தார்.
இன்று மாலை துபாய்-அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் முரக்கா பகுதியில் கட்டப்பட்டுள்ள பிஏபிஎஸ் அமைப்பு சார்பில், பல்வேறு வசதிகளுடன் 27 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட சுவாமி நாராயண் கோயில் மற்றும் அதன் வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
அபு முரைக்கா பகுதியில் அமைந்துள்ள இக்கோயில் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இளஞ்சிவப்பு ராஜஸ்தான் மணற்கல் மற்றும் வெள்ளை இத்தாலிய மார்பிள் கல் இந்தியாவில் செதுக்கப்பட்டு பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு கொண்டு செல்லப்பட்டது.
அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் நன்கொடையாக வழங்கிய 13.5 ஏக்கரில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அங்கு சென்ற போது நிலத்தை தானமாக வழங்கினார்.
கோவிலின் ஏழு கோபுரங்கள் ஒவ்வொன்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எமிரேட்டைக் குறிக்கிறது.32.92 மீட்டர் (108 அடி) உயரம், 79.86 மீட்டர் (262 அடி) நீளம் மற்றும் 54.86 மீட்டர் (180 அடி) அகலத்தில் இந்த கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பண்டைய இந்து வேதங்களான ஷில்பா சாஸ்திரங்களின் அடிப்படையில் கட்டுமான பணிகள் நடைபெற்றுள்ளன.
இந்த கோயிலுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் 2019 ஜனவரியில் மேலும் 13.5 ஏக்கரை ஒதுக்கியது. மேற்கு ஆசியாவின் மிகப்பெரிய இந்து கோயிலாக அமைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்டமான கோயிலில் ஒரே நேரத்தில் 10,000 பேர் வரை தங்கலாம். அயோத்தி ராமர் கோவில் போல், இந்த கோயிலை கட்டுமான பணிகளுக்கு இரும்பு மற்றும் எஃகு பயன்படுத்தப்படவில்லை