உலக அரசுகள் உச்சி மாநாடு 2024-ல் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
ஐக்கிய அரபு அமீரக துணை அதிபர், பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 14 அன்று துபாயில் நடைபெற்ற உலக அரசுகளின் உச்சி மாநாட்டில் கௌரவ விருந்தினராக பங்கேற்றார்.
“எதிர்கால அரசுகளை வடிவமைத்தல்” என்ற இந்த உச்சிமாநாட்டின் கருப்பொருளில் அவர் சிறப்புரையாற்றினார். 2018-ம் ஆண்டு நடைபெற்ற உலக அரசுகளின் உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றார்.
இந்த முறை நடைபெற்ற உச்சி மாநாட்டில் 10 நாடுகளின் அதிபர்கள், 10 நாடுகளின் பிரதமர்கள் உட்பட 20 உலகத் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் 120-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அரசுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி,
நிர்வாகத்தின் தன்மை குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். “குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுமை” என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் இந்தியாவின் மாற்றத்துக்கான சீர்திருத்தங்களை அவர் எடுத்துரைத்தார்.
நலன், உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மைக்கு நாடு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பது குறித்த இந்திய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட அவர், நிர்வாகத்திற்கான மனிதநேய அணுகுமுறைக்கு அழைப்பு விடுத்தார்.
அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை அடைய மக்களின் பங்கேற்பு, அனைத்துப் பகுதி மக்களுக்கும் பயன்களைச் சென்றடையச் செய்தல், மகளிர் தலைமையிலான வளர்ச்சி ஆகியவற்றில் இந்தியா கவனம் செலுத்தி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
உலக நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைக்கப்பட்டுள்ள தன்மையைக் கருத்தில் கொண்டு, எதிர்கால சவால்களை எதிர்கொள்ள அரசுகள் ஒத்துழைத்து ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அனைவரையும் உள்ளடக்கிய, தொழில்நுட்ப ரீதியான, தூய்மையான வெளிப்படையான, பசுமையான அம்சங்கள் தற்போதைய நிர்வாகத்தின் அவசியம் என்று அவர் எடுத்துரைத்தார்.
இந்தச் சூழலில், அரசுகள் பொதுச் சேவையில் தங்களது அணுகுமுறையில், எளிதான வாழ்க்கைமுறை, எளிதான நீதி, எளிதான போக்குவரத்து, புதிய கண்டுபிடிப்புகளை எளிதாக்குதல் மற்றும் வர்த்தகம் செய்வதை எளிதாக்குதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.
பருவநிலை மாற்ற நடவடிக்கைகளில் இந்தியாவின் உறுதிப்பாட்டை விவரித்த அவர், நீடித்த உலகை உருவாக்க இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறை இயக்கத்தில் மக்கள் சேர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
உலகம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு இடையே கடந்த ஆண்டு ஜி-20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றது குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
இந்தச் சூழலில், உலகளாவிய தென்பகுதி நாடுகள் எதிர்கொள்ளும் வளர்ச்சிக் குறித்த கவலைகளை உலகளாவிய விவாதத்தின் மைய அரங்கிற்கு கொண்டு வர இந்தியா மேற்கொண்ட முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார்.
பன்னாட்டு அமைப்புகளில் சீர்திருத்தம் தேவை என்று அழைப்பு விடுத்த அவர், முடிவெடுப்பதில் உலகளாவிய தென்பகுதி நாடுகளுக்கு அதிக ஆதரவு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“உலக நாடுகளின் நண்பன்” என்ற தனது பங்கின் அடிப்படையில் உலகளாவிய முன்னேற்றத்திற்கு இந்தியா தொடர்ந்து பங்களிக்கும் என்று குறிப்பிட்டார்.