புகழ்பெற்ற மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மகாசக்தி பீடங்களில் ஒன்றாக திகழ்கிறது. இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர்.
இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு, சிம்ம வாகனத்தில் அம்மன் வீற்றிருப்பது போன்ற கொடி, சிறிய பல்லக்கில் வைத்து ஆலயத்தின் சுற்றுப்பிரகாரத்தில் சிவவாத்தியங்கள், மங்கள மேள வாத்தியங்களுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.
வெள்ளி ரிஷப வாகனத்தில் காமாட்சி அம்மன் எழுந்தருளினார். தொடர்ந்து, ராஜவீதிகளில் வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவை முன்னிட்டு கோவில் முழுவதும் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வெள்ளித் தேரோட்டம் வரும் 23-ஆம் தேதி இரவு நடைபெறுகிறது.