மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காளி பகுதியில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறை குறித்து விசாரிக்க 6 பேர் குழுவை பாஜக அமைத்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காளி பகுதியைச் சேர்ந்த ஆளுங்கட்சி நிர்வாகி ஷாஜகான் ஷேக் மற்றும் அவரின் உதவியாளர்கள் மீது ஊழல் மற்றும் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தன.
அவரை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினர் மற்றும் பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதிக்குக்கு பாஜக மாநில தலைவர் சுகந்தா மஜும்தார் நேற்று சென்றபோது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மயங்கி சரிந்தார். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் விதமாக, சந்தேஷ்காளி உட்பட ஏழு கிராம பஞ்சாயத்துகளில், வரும் 19ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் கொண்ட 6 பேர் கொண்ட குழுவை பாஜக அமைத்துள்ளது. உயர்மட்டக் குழுவின் கன்வீனராக மத்திய அமைச்சர் அன்னபூர்ணா தேவி நியமிக்கப்பட்டுள்ளார்.
குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்களாக பிரதிமா பௌமிக், பாஜக எம்பிக்கள் சுனிதா துக்கல், கவிதா படிதார், சங்கீதா யாதவ் மற்றும் பிரிஜ்லால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் சம்பவ இடத்தைப் பார்வையிடவும், நிலைமையை ஆய்வு செய்யவும்,பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவிடம் அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே சந்தேஷ்காளி பகுதியில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமாக உள்ளதாகவும், ரவுடிகளுடன் காவல்துறையினர் கைகோர்த்து செயல்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் அனந்த போஸ் அறிக்கை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.