பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு சதவீதம் உள் இடஒதுக்கீட்டை அரசாணைப்படி அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை கிண்டி ரயில் நிலையம் அருகே பார்வை மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பார்வையற்றோருக்கு, தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் 1 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், என்.பி.எஸ்.சி மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கடந்த சில நாளாக மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல, கோடம்பாக்கத்திலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினரைக் கொண்டு அவர்களை அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால், அவர்களுடன் பேச்சு நடத்த தமிழக அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள், கடந்த திங்கட்கிழமை போராட்டம் நடத்தியபோது, மாற்றுத் திறனாளிகளை மாலையில் கைது செய்த காவல்துறை, இரவு முழுவதும் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று அலைக்கழித்தனர். கடைசியாக அதிகாலை 4 மணிக்கு சென்னைக்கு அப்பால் 50 கி.மீ. தொலைவில் உள்ள வல்லக்கோட்டையில் இறக்கி விட்டனர் என வேதனையை வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில்தான், சென்னை கிண்டி ரயில் நிலையம் அருகே பார்வை மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து கடும் நெருக்கடி ஏற்பட்டது. சாலை முழுவதும் வாகனங்கள் அணிவத்து நிற்கின்றன. பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து, அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தி.மு.க தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை, பதவியேற்றது முதல் புறக்கணித்து வருவதால் பல்வேறு தரப்பினரும் தி.மு.க அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.