செய்யாறு சிப்காட் விரிவாக்கம் செய்ய 3 ஆயிரம் ஏக்கருக்கும் மேலான நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்காக, 11 கிராமங்களில் வாழும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதைக் கண்டித்து 90 சதவீத செய்யாறு விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்கு நிலம் வழங்க 99 சதவீதம் விவசாயிகள் ஒப்புதல் அளித்துவிட்டதாகவும், ஒரு சதவீத விவசாயிகள் மட்டுமே சிலரின் தூண்டுதலால் அதை எதிர்ப்பதாகவும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியிருந்தார்.
அமைச்சர் எ.வ.வேலுவின் இந்தப் பேச்சுக்கு செய்யாறு விவசாயச் சங்க நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகச் சட்டசபையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, அமைச்சர் எ.வ.வேலு குறுக்கிட்டுப் பேசும் போது தெரிவித்த இந்தக் கருத்து முற்றிலும் பொய்யானது எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், விவசாயிகளிடம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்த அமைச்சர் எ.வ. வேலு முயற்சி செய்கின்றார் எனக் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுபோல் தொடர் பொய்யை வேலு சொல்லிக் கொண்டு இருந்தால், எ.வ.வேலுக்குக் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.