கும்பகோணத்தை மாவட்ட தலைநகராக அறிவிக்க வேண்டும் என கும்பகோணம் வழக்கறிஞர் சங்கம் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.
வழக்கறிஞர்கள் தங்கள் பணியில் இருந்து விலகி ஒரு நாள் அடையாள புறக்கணிப்புச் செய்து, நீதிமன்ற வாயிலின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
போராட்டத்தில் கலந்து கொண்டர்கள், கும்பகோணத்தைப் பொறுத்தவரை மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் அலுவலகங்கள் மட்டும் தான் இல்லை. ஆனால், கும்பகோணத்தில், அனைத்து அரசு அலுவலகங்களும் உள்ளன. கும்பகோணத்தில் தான் தமிழக அரசு போக்குவரத்துக் கழகக் கும்பகோணம் கோட்ட தலைமை அலுவலகம் அமைந்துள்ளது.
அதேபோன்று, தமிழகத்தில் உள்ள கோவில்களில் முக்கியக் கோவில்கள் அனைத்து ராசிகாரர்களுக்கும் உள்ள கோவில்கள் என அனைத்தும் கும்பகோணத்தில் தான் உள்ளன. இவ்வாறு பல சிறப்புகள் கொண்டுள்ளது. இருந்தாலும் மாவட்டம் என்ற அந்தஸ்து பெறவில்லை.
ஒவ்வொரு தேர்தலின் போதும், தி.மு.க., அ.தி.மு.க-வினர், கும்பகோணத்தை மாவட்ட தலைநகராக அறிவிப்போம் என வாக்குறுதி கொடுக்கின்றனர். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் அதனை நிறைவேற்றுவதில்லை.
மாவட்டமாக அறிவிக்கப்பட்டால் கும்பகோணம் பகுதி பொருளாதாரம் மற்றும் கல்வியில் நல்ல வளர்ச்சியடையும். எனவே, வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு, கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்கத் தமிழக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்தனர்.