2024 மக்களவை தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, 2024 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களை நடத்த முழுமையாக தயாராக உள்ளோம். அனைத்து ஏற்பாடுகளும் ஏறக்குறைய முடிந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.
சுமார் 3,380 மூன்றாம் பாலின வாக்காளர்களை சேர்க்க சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 50 சதவீத வாக்குச்சாவடிகளில் வெப்காஸ்டிங் வசதி இருக்கும் என அவர் கூறினார். 22,685 வாக்குச் சாவடிகளில் வெப்காஸ்டிங் ஏற்பாடுகள் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். சுமார் 300 வாக்குச்சாவடிகள் மாற்றுத்திறனாளிகளால் நிர்வகிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
2024 மக்களவை தோ்தலுக்காக நாடு முழுவதும் 12 லட்சத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. 1.5 கோடி தோ்தல் பணியாளா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 91.20 கோடி போ் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனா். இந்த எண்ணிக்கை 6% அதிகரித்து வரும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க 96.88 கோடி பேர் தகுதி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் 2.53 கோடி புதிய வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.