இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 557 ரன்கள் என்ற இமாலய இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 15 ஆம் தேதி ராஜ்கோட்டில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 445 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 131 ரன்களும், ஜடேஜா 112 ரன்களும் எடுத்தனர். அதேபோல் அறிமுக வீரர்களான சர்ப்ராஸ் கான் 62 ரன்களும், துருவ் ஜூரெல் 46 ரன்களும் எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 319 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பென் டக்கெட் 153 ரன்களை எடுத்தார். இந்தியாவின் சார்பில் அதிகபட்சமாக சிராஜ் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. பேட்டிங் செய்த இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 430 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 14 பௌண்டரி மற்றும் 12 சிக்சர் என மொத்தமாக 214 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அதேபோல் அறிமுக வீரர் சர்பராஸ் கான் 6 பௌண்டரி மற்றும் 3 சிக்சர் என 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். சுப்மன் கில் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணிக்கு 557 ரன்கள் இலக்காக உள்ளது. தற்போது இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.