தி.மு.க ஆட்சியின் போது, தமிழ்நாட்டின் பேருந்து நிலையங்கள் உட்பட பல்வேறு கட்டிடங்களுக்குப் பெரும்பாலும் திராவிட இயக்க தலைவர்கள் பெயர்கள் வைக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, பெரியார், அண்ணா, கருணாநிதி போன்ற பெயர்களை தி.மு.க. ஆட்சியில் வைக்கப்படுகிறது. சமீபத்தில், சென்னை கிளாம்பாக்கத்தில் திறக்கப்பட்ட பேருந்து முனையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையும் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று திறக்கப்பட்ட திருநெல்வேலி ஜங்ஷன் பேருந்து நிலையத்திற்கு பெரியார் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு, பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, இன்று திறக்கப்பட்ட திருநெல்வேலி பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில், மத்திய அரசு நிதியில் கட்டும் இடங்களுக்கும், திராவிடத் தலைவர்கள் பெயர்கள் எப்படி வைக்கலாம்? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
திருநெல்வேலிக்கும் ஈ.வெ.ராவுக்கும் என்ன தொடர்பு? என கேள்வி எழுப்புவர்கள், வ.உ.சிதம்பரம் பிள்ளை போன்ற தியாகத் தலைவர்கள் பிறந்த மண் இது. அவர்கள் பெயர் வைத்திருக்கலாம் அல்லது வள்ளுவர், பாரதியார், சுப்ரமணிய சிவா, திரு.வி.க. போன்ற பெரும் தலைவர்களின் பெயர்களை வைத்திருக்கலாம். அப்படி இல்லாமல் வரலாற்றை இருட்டடிப்பு செய்கிறது தி.மு.க. என்றும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.