கோவை காரமடை அரங்கநாத சுவாமி கோவில் மாசிமக திருத்தேர் விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மங்கள வாத்தியங்கள் முழங்க, கருடன் உருவப்படம் பொறித்த கொடி, வேத விற்பன்னர்களால் கொடிக் கம்பத்தில் பயபக்தியுடன் ஏற்றப்பட்டது.
அப்போது, பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா எனபக்தி கோஷமிட்டனர். கொடியேற்ற நிகழ்வில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, இன்றிரவு அன்ன வாகன உற்சவம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து சிம்ம வாகனம் , அனுமந்த வாகனம், அரங்கநாத பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.
இதனைத்தொடர்ந்து, வரும் 23 -ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், அன்று இரவு யானை வாகன உற்சவமும் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வரும் 24 -ம் தேதி நடைபெற உள்ளது.