புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பம் மூலம் மக்களின் அன்றாட சிரமங்களுக்குத் தீர்வு காண முடியும் என்று மத்திய பணியாளர் நலன், ஓய்வூதியம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
திறன் கட்டமைப்பு ஆணையம் (சிபிசி) தொகுத்த பொது நிர்வாகத்தில் புதுமைகள் குறித்த சிறப்புத் தொகுப்பை டெல்லியில் இணையமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்டார்.
இதுகுறித்து மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது, புதுமைக் கண்டுபிடிப்புகள் என்பது விஞ்ஞானிகள் மட்டுமே கவனம் செலுத்தும் துறை மட்டுமல்ல, மனநிலை மற்றும் அணுகுமுறையை மாற்றுவதன் மூலம் எந்தவொரு நபரும் புதுமையைப் படைத்து அவற்றை ஊக்குவிக்க முடியும்.
தொழில்நுட்ப வளர்ச்சியில் புதிய கண்டுபிடிப்புகளை நிறுவனமயமாக்குதலின் மூலம் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதே பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை ஆகும்.
புதுமைகள் வாழ்க்கையை எளிதாக்குவதைத் தாண்டி, சமூக மாற்றத்தைக் கொண்டுவருவதன் மூலம் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பல நன்மைகளுக்கு வழிவகுக்கிறது.
சமூக ஊடக தளங்கள், பரந்த அளவில் மக்களைச் சென்றடைவதால் அவற்றின் மூலம் பொது நிர்வாகத்தில் புதுமைகளை மேலும் விளம்பரப்படுத்துமாறு திறன் மேம்பாட்டு ஆணையத்திற்கு அறிவுறுத்தினார்.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் புதிய நடைமுறைகளுக்கு முன்னோடியாக இருக்கும் அனைத்து குடிமைப் பணியாளர்களையும் பாராட்டினார்.
மேலும், புதுமைகளை ஊக்குவிக்க செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுப் பகுப்பாய்வு ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.