ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிக்கு 370-வது சட்டப்பிரிவு மிகப்பெரிய தடையாக இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் ரூ.32,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய பிரதமர் மோடி, சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, தற்போது யூனியன் பிரதேசமாக இருக்கும் ஜம்மு காஷ்மீர், அனைத்து துறைகளிலும் சீரான வளர்ச்சியைக் கண்டுள்ளதாக தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் அனைத்து துறை வளர்ச்சியை கொண்டு வருவதற்கு 370வது சட்டப்பிரிவு முக்கிய தடையாக இருந்ததாகவும், அதனை பாஜக அரசு ரத்து செய்துவிட்டதாகவும் பிரதமர் கூறினார்.
ஒரு குடும்பத்தின் நலனை மட்டுமே முதன்மையாகக் கொண்ட அரசு, சாமானியர்களின் நலனைப் பற்றி சிந்திக்க முடியாது. ஜம்மு-காஷ்மீர் வம்ச ஆட்சியில் இருந்து விடுபடுவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன் என்றும் அவர் கூறினார்.
370-வது பிரிவை ரத்து செய்த பிறகு, ஜம்மு-காஷ்மீர் சாமானிய மக்களுக்கு முதன்முறையாக அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சமூக நீதிக்கான உத்தரவாதம் கிடைத்துள்ளது என்றும் மோடி கூறினார். ஜம்மு காஷ்மீருக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க நாள் என்று கூறினார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள திட்டங்கள் அப்பகுதியின் முழுமையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறினார்.
ஜம்மு காஷ்மீரில் புதிதாக பணியமர்த்தப்பட்ட சுமார் 1,500 அரசு ஊழியர்களுக்கு பணி நியமனக் கடிதங்களையும் மோடி வழங்கினார் மற்றும் ‘விக்சித் பாரத், விக்சித் ஜம்மு’ திட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.