ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு விரிவான, தரமான, முழுமையான மருத்துவ சேவைகளை வழங்கும் வகையில், ஜம்முவின் விஜய்பூர் பகுதியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தைப் பாரத பிரதமர் திறந்து வைத்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் விஜய்பூர் பகுதியில் கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிறுவனம், பிரதமரின் பின்தங்கிய மாநிலங்களில் மருத்துவ கல்வி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நிறுவப்படுகிறது.
சுமார் 1,660 கோடி ரூபாய் மதிப்பில், 227 ஏக்கர் பரப்பளவில் நிறுவப்பட்ட இந்த மருத்துவமனை 720 படுக்கைகள், 125 இருக்கைகளுடன் மருத்துவக் கல்லூரி, 60 இருக்கைகளுடன் செவிலியர் கல்லூரி, 30 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் பிரிவு, ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான குடியிருப்பு வசதிகள், இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கான விடுதி தங்குமிடம், இரவு தங்குமிட வசதி, விருந்தினர் இல்லம், அரங்கம், வணிக வளாகம் போன்றவை இடம்பெற்றுள்ளன.
இந்த அதிநவீன மருத்துவமனை, இதயம், இரைப்பை, குடலியல், சிறுநீரகவியல், நரம்பியல், நரம்பியல் அறுவை சிகிச்சை, மருத்துவ புற்றுநோயியல், அறுவை சிகிச்சை புற்றுநோயியல், உட்சுரப்பியல், தீக்காயங்கள், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை உள்ளிட்ட 17 உயர் சிறப்பு பிரிவுகளில் நோயாளிகள் பராமரிப்பு சேவைகளை வழங்கும்.
இந்த நிறுவனத்தில் தீவிர சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, 20 நவீன அறுவை சிகிச்சை அரங்குகள், நோயறிதல் ஆய்வகங்கள், ரத்த வங்கி, மருந்தகம் போன்றவை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.