இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய வீரர் துருவ் ஜூரெல் குறித்து பார்போம்.
இங்கிலாந்துக்கு கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் நான்காவது போட்டி வரும் 23ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் நடந்து முடிந்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இரண்டு வீரர்கள் தங்கள் அறிமுக ஆட்டத்தில் ஆடினார்.
இதில் சர்ப்ராஸ் கான் – துருவ் ஜூரெல் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர். இந்தப் போட்டியில் சர்ப்ராஸ் கான் முதல் இன்னிங்சில் 62 ரன்களை எடுத்து அறிமுக ஆட்டத்தில் அதிவேக அரைசதம் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இரண்டாவது இன்னிங்சில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல் துருவ் ஜூரெல் முதல் இன்னிங்சில் 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார்.
இருப்பினும் இவர் தனது அறிமுக போட்டியில் சிறப்பாக விளையாட்டி தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொண்டார். ஆனால் அனைவரும் சர்ப்ராஸ் கான் பற்றி பேசினார்களே தவிர துருவ் ஜூரெல் பற்றி பேசவில்லை.
யார் இந்த துருவ் ஜூரெல் ?
உத்தர பிரதேச மாநில கிரிக்கெட் வீரரான துருவ் ஜுரேல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆவார். இவரின் தந்தை 1999 ஆம் நடந்த கார்கில் போரில் ஆயுதப்படையில் ஒருவராக இருந்தார்.
துருவ் ஜூரெலின் கிரிக்கெட் பயணத்திற்கு அவரது குடும்பத்தினர் பல தியாகங்களை செய்துள்ளனர். அவரது கிரிக்கெட் கிட் வாங்குவதற்கு கூட அவரது அம்மா, தனது தங்கச் சங்கிலியை விற்றுக் கொடுத்துள்ளார்.
ஜூரெல் கிரிக்கெட் விளையாடுவதை அவரது தந்தை முதலில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதன் பிறகு அவருக்கு ஆதரவு கொடுத்துள்ளார்.
இவர் தனது 13 வயதில் கிரிக்கெட் விளையாடுவதற்காக தனது வீட்டை விட்டு வெளியே ஆக்ராவில் இருந்து தேசிய தலைநகர் மண்டலம் ( NCR ) வரை சென்றார்.
அங்கு தங்குவதற்கு இடம் இல்லாமல் கஷ்டப்பட்ட இவரின் திறமையை கண்டு கிரிக்கெட் பயிற்சியாளர் இவருக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார்.
பின்னர் இவர் அண்டர் 19 தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்பட்டார். கடந்த 2023 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிய துருவ் ஜுரேல் இம்பாக்ட் பிளேயராக சில போட்டிகளில் அதிரடி ஆட்டம் ஆடி கவனம் ஈர்த்தார். அதன் பின் பெரிய சத்தம் இன்றி இருந்த நிலையில் அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார்.
அண்டர் 19 அணியில் இருந்தே துருவ் ஜுரேல் மீது பிசிசிஐ தேர்வுக் குழு ஒரு கண் வைத்து இருந்தது. பின்னர் ஐபிஎல் செயல்பாடுகளால் ஈர்த்தவர், தொடர்ந்து ரஞ்சி ட்ராபி, விஜய் ஹசாரே ட்ராபி போன்ற உள்ளூர் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு வந்ததை அடுத்து இந்திய டெஸ்ட் அணியில் மாற்று விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளார்.