கேரள மாநிலத்தில் நடைபெறும் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயிலில் அலங்காரத்திற்காக காவி கொடிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அகற்றியதால் அங்கு போராட்டம் நடந்துள்ளது.
கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பத்து நாட்கள் நடைபெறும் பொங்காலை எனப்படும் பொங்கல் திருவிழா உலகப்புகழ் பெற்றது.
இந்த ஆண்டு இந்த திருவிழாவானது பிப்ரவரி 17-ம் தேதி தொடங்கியது. இந்த விழாவையொட்டி கோயிலில் காவிக்கொடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், அலங்காரத்திற்காக கட்டியிருந்த காவி கொடிகளை அகற்றினர்.
வார்டு கவுன்சிலர் உன்னிகிருஷ்ணன் மற்றும் உள்ளூர் எம்.எல்.ஏ., முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் இடம் பெற்ற பேனர் கொண்டு அந்த காவி கோடியை அக்கட்சியினர் மறைத்தனர்.
அதில், ” ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் பொங்கலையொட்டி சீரமைப்புப் பணிகளுக்காக ரூ.2.5 கோடி நிதியுதவி வழங்கிய கேரள மாநில அரசுக்கு வணக்கம்” என்று வாசகம் எழுதப்பட்டிருந்தது.
இதனால் கோபமடைந்த பாஜக கட்சியினர் உள்ளிட்ட இந்து பக்தர்கள், அந்த பேனரை அகற்றுமாறு கோரிக்கை விடுத்தனர். இதனால் அப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பதற்றம் நிலவி வந்தது.
மேலும் அந்த பேனர் கடந்த திங்கட்கிழமை அன்று அகற்றப்பட்டது. ஆனால் மறுநாளான பிப்ரவரி 20 ஆம் தேதி அன்று மீண்டும் அந்த பேனர் வைக்கப்பட்டது.
இதனால் கோவமடைந்த இந்து பக்தர்கள், நேற்று மாலை அந்த பேனரை கிழித்து எறிந்தனர். இதனால் போலீசாருடன் வாக்குவாதமும், மோதலும் ஏற்பட்டது.
மோதலுக்குப் பிறகு, பல ஆர்வலர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பாஜகவினர் கோட்டை காவல் நிலையத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவிலின் சமய உற்சவத்தை அரசியலாக்கியதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறிப்பாக ஆற்றுக்கால் பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்து அமைப்புகள் மேற்கொண்ட அறப்பணிகளுக்கு எதிரான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளின் விளைவாகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இது போன்ற செயல்கள் கோவில் வழிபாட்டு முறைகளை நேரடியாக அவமதிப்பதாக கருதப்படுவதால் பக்தர்கள் அக்கட்சியின் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.