சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT மெட்ராஸ்), 2023-ஆம் ஆண்டில் பெறப்பட்ட காப்புரிமைகளின் எண்ணிக்கையை இருமடங்காக்கி சாதனை படைத்துள்ளது. 2022-ல் 156 காப்புரிமைகள் பெறப்பட்ட நிலையில், 2023-ல் இந்த எண்ணிக்கை 300 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.
மேலும், முந்தைய ஆண்டில் 58 சர்வதேச காப்புரிமைகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 2023-ல் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்து 105-ஐ எட்டியுள்ளது.
நடப்பு நிதியாண்டில் (டிசம்பர் 2023 நிலவரப்படி) 163 இந்தியக் காப்புரிமை, 63 சர்வதேசக் காப்புரிமை விண்ணப்பங்கள் உட்பட 221 காப்புரிமைகள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.
இக்கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து தற்போதுவரை இந்தியாவிலும் (1,800), வெளிநாடுகளிலும் (750) மொத்தம் 2,550 அறிவுசார் சொத்து (ஐபி) விண்ணப்பங்கள் (காப்புரிமை உள்பட) தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஐஐடி மெட்ராஸ் 1975-ஆம் ஆண்டு ஜனவரியில் காப்புரிமை விண்ணப்பங்களைத் தாக்கல் செய்யத் தொடங்கியது. மொத்த ஐபி விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2016-ல் ஆயிரத்தையும், 2022-ல் 2 ஆயிரத்தையும், 2023-ல் 2 ஆயிரத்து 500-ஐயும் கடந்துள்ளது.
இதுகுறித்து IIT மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறியதாவது, “நாம் சுதந்திரத்தின் 100-வது ஆண்டை நோக்கிப் பயணிக்கும்போது பாரதம் வல்லரசு நாடாக உருவெடுக்க நமது கருத்துக்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது.
அதிக எண்ணிக்கையிலான காப்புரிமைகளைத் தாக்கல் செய்து சாதனை படைக்கும் வகையில் விரிவான திட்டத்தைத் தொகுத்தளித்த தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி அலுவலகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு எனது பாராட்டுகள்” எனக் குறிப்பிட்டார்.
அறிவுசார் சொத்து மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் தொடர்பான பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைக்கும் பணியை ஐஐடி மெட்ராஸ்-ல் உள்ள தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி அலுவலகம் மேற்கொண்டு வருகிறது. ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்களுடன் இணைந்து செயல்பட்டு வரும் இந்த மையத்தில் பிரத்யேக சட்டப்பிரிவு ஒன்றும் இயங்கி வருகிறது.