மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்க உள்ள நிலையில், அங்கு உள்ள 314 மரங்களை அகற்றுவது தொடர்பான ஏலம் திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 24ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுதொடர்பாக திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் செய்திக்குறிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், கோ.புதுப்பட்டி கிராமத்தில் 90.07.02 ஹெக்டேர் பரப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி கட்டுமான பணிகளுக்கு இடையூறாக உள்ள 314 மரங்களை அகற்ற அனுமதி கோரப்பட்டது. கடந்த 10.11.2023 அன்று நடைபெற்ற பசுமைக்குழு கூட்டத்தில் மாவட்ட பசுமைக்குழு தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் மரங்களை அகற்ற அனுமதி வழங்கியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சித்தலைவரால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளுடன் பொது ஏல அறிவிப்பு மூலம் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ள புலங்களில் உள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி பெற விருப்பம் உள்ளவர்கள் எதிர்வரும் 24.02.2024 (சனி கிழமை) காலை 11.00 மணியளவில் நேரடியாக திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.