கோவை அருகே நடைபெற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகள் விளையாட்டு விழாவில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் பங்கேற்றார்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்வி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளின் ‘ஒருங்கிணைந்த விளையாட்டு விழா’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் கலந்து கொண்டார்.
இந்த ஒருங்கிணைந்த விளையாட்டு விழா நிகழ்ச்சியில் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள், பார்வை திறன் குறைபாடு உள்ள குழந்தைகள், கேட்கும் திறன் குறைபாடுள்ள குழந்தைகள், உடல் இயக்க குறைபாடு உள்ள குழந்தைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளும் அவர்களுடன் பயிலக்கூடிய மாற்றுத்திறனாளி அல்லாத குழந்தைகளும் என சுமார் 900 குழந்தைகள் கலந்து கொண்டு இணைந்து உடற்பயிற்சிகளை செய்தனர்.
ஒருங்கிணைந்த கல்வி முறையின் அவசியத்தை உணர்த்தவும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்களுடைய திறமைகளை மற்றவர்களுக்கு காண்பிக்கும் விதமாகவும் இந்த விளையாட்டுப் போட்டி விழா நடத்தப்பட்டதாக ராமகிருஷ்ணா கல்வி நிறுவன நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன், ‘மாற்றுத் திறனாளி குழந்தைகள் விளையாட்டில் கலந்து கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. பிரதமர் மோடி விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். கிராமங்களில் இருந்து விளையாட்டு வீரர்களை அடையாளப்படுத்தும் விதமாக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை மத்திய அரசு நடத்தி வருகிறது.
அது மட்டும் இன்றி விளையாட்டுக்கான உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதன் விளைவாக சமீபத்தில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் வரலாற்றுச் சாதனையாக இந்தியா முதல் முறையாக அதிகப்படியான பதக்கங்களை வென்றது.
இதேபோல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆர்வத்துடன் விளையாட்டுகளில் கலந்து கொண்டு சாதனை புரிய வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கற்றல் மேம்பாட்டு பயிற்சி மற்றும் தெரப்பி சிகிச்சை முறைகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த அரங்குகளையும் அமைச்சர் பார்வையிட்டார்.