பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் நேரில் ஆஜராகுமாறு பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின் போது, பாஜக மீது காங்கிரஸ் கட்சி ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி செய்தித்தாள்களில் விளம்பரங்களை வெளியிட்டது.
இதுதொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் மீது கர்நாடக பாஜக செயலாளர் சிவபிரசாத், பெங்களூரு 42-வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வினோத் குமார், தவறான விளம்பரங்களால் பாஜகவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாக வாதிட்டார். இதனையடுத்து ராகுல் காந்தி உள்ளிட்ட 3 தலைவர்களும் மார்ச் 28ஆம் தேதி நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.