ஏர் மொரீஷியஸ் விமானத்தில் இயந்திர கோளாறு காரணமாக பயணிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது
எம்கே 749 என்ற ஏர் மொரிஷியஸ் விமானம் மும்பையில் இருந்து மொரீஷியஸுக்கு அதிகாலை 4:30 மணிக்கு புறப்பட இருந்தது. பயணிகள் அதிகாலை 3.45 மணிக்கு விமானத்தில் ஏறினர். ஆனால் விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பயணிகள் சுமார் 5 மணிநேரம் விமானத்திலேயே அமரவைக்கப்பட்டனர். இதனிடையே இயந்திர கோளாறால் ஒரு கட்டத்தில் ஏசி வேலை செய்யவில்லை. இதனால் பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விமானத்தில் இருந்த 78 பயணிகளும் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர்.
இதனிடையே விமான நிலைய ஹெல்ப்லைன் மற்றும் ஏர் மொரிஷியஸை தொடர்பு கொண்டாலும் எதுவும் நடக்கவில்லை என பயணி ஒருவர் தெரிவித்தார். விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தேவையான பிற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் மற்றொரு பயணி கூறினார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.