பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளைக் குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதலில், ஜெய்ஷ் அல் அடில் என்ற தீவிரவாத இயக்கத்தின் தளபதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானை தலமாகக் கொண்டு பல்வேறு தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. இந்த தீவிரவாத அமைப்புகள் உலகின் பல நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அண்டை நாடுகளுக்குள் புகுந்து பல அசம்பாவித சம்பவங்களை இந்த தீவிரவாத அமைப்புகள் செய்து வருகிறது.
அந்தவகையில், பாகிஸ்தானை தலமாகக் கொண்டு இயங்கி வரும், ஜெய்ஸ் அல் அடில் என்ற தீவிரவாத அமைப்பு ஈரானுக்கு பல அச்சுறுத்தல்களைக் கொடுத்து வந்தது. அவ்வப்போது ஈரானின் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து தாக்குதலையும் நடத்தி வந்தது.
இதனால், ஆத்திரமடைந்த ஈரான், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் செயல்படும் ஜெய்ஷ் அல்-அடில் என்ற தீவிரவாத இயக்கத்தின் இலக்குகளைக் குறிவைத்து கடந்த மாதம் ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடியாக ஈரானின் தென்கிழக்கு பகுதியில் பாகிஸ்தானுக்கு எதிரான பிரிவினைவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக, இரு நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவியது. பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில் அமைதி திரும்பியது.
இந்நிலையில், ஈரான் இராணுவம் மீண்டும் பாகிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்தி உள்ளது. இதில், ஜெய்ஷ் அல் அடில் தீவிரவாத இயக்கத்தின் தளபதி இஸ்மாயில் ஷாபக்ஷ் மற்றும் சிலர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தலாம் என்பதால், இரு நாடுகளுக்கும் இடையே, பதற்றமான சூழல் நிலவுகிறது.