சீனாவின் நான்ஜிங் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 15 பேர் உயிரிழந்தனர். 44 பேர் காயமடைந்தனர்.
சீனாவின் நான்ஜிங் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து ஏற்பட்டது. முதல் தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த, மின்சார வாகனங்களில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மற்ற வாகனங்களுக்கும் மளமளவென பரவியது.
இதனால், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர். இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் சிக்கி, 15 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 44 பேர் காயமடைந்தனர். அப்பகுதியில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதில், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த தீ விபத்து குறித்து அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.